
பாலிங், அக்டோபர் -6,
நேற்று இரவு, பாலிங் கம்போங் பண்டார் மூக்கிம் சியோங் (Kampung Bandar, Mukim Siong) பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்திலுள்ள பெட்ரோல் பம்ப் தீப்பற்றியதால், அப்பகுதி மக்கள் பெரும் பரபரப்புக்குள்ளானார்கள்.
இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடனேயே, மீட்பு பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் என்று பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய (BBP) தலைவர், சுல்கைரி மாட் தாஞ்சில் (Zulkhairi Mat Tanjil) தெரிவித்தார்.
எரிபொருள் நிலையத்தின் முன்புறத்தில் உள்ள பெட்ரோல் பம்ப் பகுதி மட்டும் தீப்பற்றியிருந்தது என்றும் சம்பவத்தில் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் அறியப்படுகின்றது.
மேலும் பம்ப் அமைப்பு மற்றும் சில உபகரணங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டன என சுல்கைரி தெரிவித்தார்.
மேலும், தீ அதிகரிக்கும் அபாயத்தைத் தவிர்க்க, பெட்ரோல் பம்ப் பகுதியில் மேற்பரப்பை மூடுவதற்கான சிறப்பு நுரை (foam) முறையும், முக்கிய வால்வைப் (injap utama) பூட்டும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிடப்பட்டது.