
கோலாலம்பூர், ஏப்ரல்-10-பால் இருக்கிறது, ஆனால் நிரப்புவதற்கு பாட்டில்கள் தான் இல்லை…
ஆம், அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றத்தால் மலேசியாவில் தற்போது பிளாஸ்டிக் பொட்டல தட்டுப்பாடு ஒரு பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.
மத்தியக் கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் பெட்ரோகெமிக்கல் (Petrochemical) விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்கத் தேவையான ‘PET resin’ எனப்படும் மூலப்பொருளுக்கு உலகளாவிய தட்டுப்பாடு நிலவுகிறது.
இதன் நேரடிப் பாதிப்பாக, சந்தையில் Farm Fresh போன்ற முன்னணி நிறுவனங்களின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பால் கையிருப்பு தாராளமாக இருந்தாலும், பாட்டில்கள் கிடைக்காததால் தற்காலிகமாக காகித அட்டைகளுக்கு (Paper Cartons) மாறப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தட்டுப்பாடு சமையல் எண்ணெய், ஷாம்பு மற்றும் பானங்கள் எனப் பல பொருட்களையும் பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆசியாவில் பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் விலை 40 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதால், உற்பத்திச் செலவும் 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இந்தத் தடை, வரும் நாட்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்த மேற்காசிய நெருக்கடி எண்ணெய் – எரிவாயு வளங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, பிளாஸ்டிக் பொட்டலங்கள் கூட நமக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதை உணர்த்தியுள்ளது…



