Latestமலேசியா

பினாங்கில் RM334,000-திலிருந்து RM180-தாக நிலவரி குறைப்பு; நில உரிமையாளர்கள் ஏப்ரல் 30-க்குள் மேல்முறையீடு செய்ய அழைப்பு – லிம் குவான் எங்

ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-8-பினாங்கில் 12 ஹெக்டர் நிலத்திற்கு விதிக்கப்பட்டிருந்த நில வரி, மாநில அரசாங்கத்தின் மறுபரிசீலனைக்குப் பிறகு RM334,544-த்திலிருந்து RM180-தாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிகபட்சம் 82 விழுக்காடு வரை வரிக் குறைப்புகளைப் பெற, ஏப்ரல் 30-க்குள் மேல்முறையீடு செய்யுமாறு நில உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேல்முறையீட்டுக்கான RM50 கட்டணமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் கூறினார்.

திருத்தப்பட்ட இந்தக் கட்டண விகிதங்கள் குறித்து பினாங்கு முதல்வர் Chow Kon Yeow, நேற்று தம்மிடம் உறுதிப்படுத்தியதாக குவான் எங் சொன்னார்.

நகர்ப்புற பகுதிகளில் பெரும்பாலும் குடியிருப்பு பயன்பாட்டுக்கான சொத்துகளுக்கு, நில வரி விகிதம் சதுர மீட்டருக்கு RM3.25-திலிருந்து 70 சென்னாக, அதாவது 78.5 விழுக்கடு குறைக்கப்பட்டுள்ளது.

அதுவே கிராமப்புறங்களில் RM2.80-திலிருந்து 50 சென்னாக, அதாவது 82 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தவிர, கட்டடங்கள் இல்லாத காலி நிலங்களுக்கு, ஹெக்டருக்கு RM25 என்ற விவசாய விகிதத்தில் வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அடுத்ததாக, மலிவு விலை வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கிராமப்புற வீடுகளுக்கான சிறப்பு விகிதங்கள் மற்றும் 50% வரிச்சலுகை போன்ற கூடுதல் நடவடிக்கைகளும் மாநில அரசின் பரிசீலனையில் உள்ளன.

இந்த நில வரிக் குறைப்பால் நில உரிமையாளர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைப்பதால், அனைத்து நில உரிமையாளர்களும் ஏப்ரல் 30-க்குள் மேல்முறையீடு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!