
கோலாலம்பூர், ஏப் 8- தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்புக் குழு கோயில் இன்று பிரதமரின் சிறப்பு அரசியல் ஆலோசகர் தெங்கு ஷப்ரோல் அவர்களுடன் சந்திப்பு நடத்தியது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தேசிய இந்து வழக்கறிஞர் சங்கத்தின் துணைத்தலைவர் டத்தோ முருகேசன் , மலேசிய இந்து சங்கத்தின் கல்வி மற்றும் சமூக நல பிரிவின் பொறுப்பாளர் வி. என். பரமேஸ்வரி, மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ரிஷிகுமார் மற்றும் மலேசிய இந்து சங்கத்தின் துணை கௌரவ பொருளாளர் வி .என் .விஜய பாஸ்கர் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர், தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்புக் குழு (NHTSC) உருவாக்கம், அதன் நோக்கம், தற்போதைய செயல்பாட்டு நிலை மற்றும் எதிர்காலத்திற்கான முக்கியத் தேவைகள் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தெங்கு ஜப்ருல் அஜிஸிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த சந்திப்பு அமைந்தது.
அதோடு இந்து ஆலயங்கள் தொடர்பாக எழும் பிரச்னைகளை கவனிப்பதற்கு அரசாங்கம் சிறப்பு ஆலோசகர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தோடும் இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.
இது தொடர்பான விளக்கங்களை மிகவும் கவனமாக தெங்கு ஜப்ருல் கேட்டுக்கொண்டதோடு ஆக்கப்பூர்வமான மற்றும் பயனுள்ள கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்புக் குழுவின் நோக்கங்கள், சவால்கள் மற்றும் பணிகளின் எல்லை ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்வதற்காக, அவர் பொருத்தமான மற்றும் ஆழ்ந்த சிந்தனையுள்ள கேள்விகளையும் எழுப்பினார்.
மேலும், கோயில் தொடர்பான தற்போதைய பிரச்னைகளைத் தீர்ப்பதில், ஆதரவிற்கான சாத்தியமான வழிகள் குறித்த தனது கருத்துக்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
முக்கியமாக, மலேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்பு குழுவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கும், குறிப்பாக முக்கியப் தரப்புகளுடன் திறம்பட செயல்படுவதற்கு வழிவகுப்பதற்கும் தனது உறுதிப்பாட்டை தெங்கு ஷப்ருல் வெளிப்படுத்தினார்.
ஒட்டுமொத்தமாக, இக்கூட்டம் ஊக்கமளிப்பதாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் இருந்ததுடன், தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கான நேர்மறையான அறிகுறிகளையும் காட்டியது என வி.என். பரமேஸ்வரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.



