
புத்ராஜெயா, டிசம்பர்-1 – அமைச்சரவை மாற்றம் பற்றி அரசல் புரசலாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றம் எதுவும் இருக்காது என பிரதமர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
“சில காலியிடங்களை நிரப்ப வேண்டிய அவசியம் உள்ளது; இருப்பினும், தற்போதைய அமைச்சரவை ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் வரை தொடரும்” என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அரசாங்கத்தின் நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சியான ஆட்சி தான் முக்கியம் என்றார் அவர்.
பிரதமரின் இவ்வறிவிப்பின் மூலம் அமைச்சரவை மாற்றம் குறித்து பேச்சுகள் முடிவுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் தோல்வி கண்டதை அடுத்து டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி, நிக் நஸ்மி நிக் அஹ்மாட் இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சரவையிலிருந்து விலகியதை அடுத்து அவ்விடங்கள் காலியாயின.
நிரந்தரமாக யாரையும் நியமிக்காமல் தற்காலிகமாக 2 அமைச்சர்கள் அவ்விரு பொறுப்புகளையும் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், 40% சபா வருவாய் விவகாரம் தொடர்பில் அண்மையில் தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து டத்தோ இவோன் பெனடிக் விலகினார்.
MITI எனப்படும் முதலீடு, அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சரான தெங்கு டத்தோ ஸ்ரீ சாஃப்ருல் அசிஸின் செனட்டர் பதவிக் காலமும் முடிவடைவதால், நாளையோடு அவரின் அமைச்சர் பொறுப்பும் முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் குறைந்தது 4 இடங்களை அன்வார் நிரப்ப வேண்டியுள்ளது.



