
கோலாலம்பூர், மே-7 – இம்மாதக் கடைசியில் நடைபெறவிருக்கும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கப் போட்டியிடுவதை, டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி உறுதிப்படுத்தியுள்ளார்.
தம்மை எதிர்த்து யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்; அவர்கள் நடப்பு உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் அல்லது பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயிலாகவும் இருக்கலாம்.
ஜனநாயகக் கட்சியில் போட்டியை தாம் முழுமனதோடு வரவேற்பதாக, பொருளாதார அமைச்சருமான அவர் சொன்னார்.
இத்தேர்தலை கட்சியை வலுப்படுத்தும் மேடையாகப் பயன்படுத்திக் கொள்வோம்; ஒருவேளை தோற்றால், மீண்டும் அடிமட்ட உறுப்பினராக தமது சேவைத் தொடருமென, அறிக்கை வாயிலாக ரஃபிசி கூறினார்.
இதன் மூலம், கட்சித் தேர்தலில் அவர் போட்டியிடுவாரா மாட்டாரா என நீடித்த கேள்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
துணைத் தலைவர் பதவிக்கு ரஃபிசியை எதிர்த்து சைஃபுடின் போட்டியிடலாமென முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் புதிதாக நூருல் இசாவின் பெயரும் பலமாக அடிபடுவதால், துணைத் தலைவருக்கான போட்டி விறுவிறுப்படைந்துள்ளது.
நூருல் இசா வெளிப்படையாக அறிவிக்கா விட்டாலும், அவருக்கு ஆதரவாக தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த புதல்வியான நூருல் இசா, தற்போது உதவித் தலைவராக உள்ளார்.