
கோலாலம்பூர், மார்ச்-19 – குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு சுகாதார பரிசோதனைகள் கிடைப்பதை உறுதிச் செய்வதற்காக PeKa B40 திட்டத்தை செயல்படுத்தும் அரசாங்கத்தின் தொடர் முயற்சிகள் பாராட்டுக்குரியது.
இருப்பினும், மேலவையில் கொடுக்கப்பட்ட பதில்களின் அடிப்படையில், தீவிர கவனம் செலுத்த வேண்டிய பல பிரச்சினைகள் இருப்பதாக, செனட்டர் Dr லிங்கேஷ்வரன் சுட்டிக் காட்டியுள்ளார்.
இவ்வாண்டு ஜனவரி 31 நிலவரப்படி, தகுதிப் பெற்றவர்களில் 22.04 விழுக்காட்டினர் மட்டுமே PeKa B40 சுகாதார பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, சிலாங்கூரில் 14.14 விழுக்காடாகவும், கோலாலம்பூரில் 10.85 விழுக்காடாகவும் லாபுவானில் 10.17 விழுக்காடாகவும் அவ்விகிதம் கவலையளிக்கும் வகையில் உள்ளது.
இது, இந்தச் சேவைகளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அவற்றைப் பெறுவதில் இன்னும் பெரிய இடைவெளி இருப்பதைக் காட்டுவதாக லிங்கேஷ் கூறினார்.
அதை விட கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், பரிசோதனை மேற்கொண்டோரில் 41 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு தொற்றா நோயால் (NCD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான்.
மலேசியாவில் தொற்றா நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆரம்பகால பரிசோதனையின் முக்கியத்துவத்தை இது நிரூபிப்பதாக அவர் சொன்னார்.
எனவே, இந்த PeKa B40 திட்டம் மக்களைக் குறிப்பாக கிராமப்புறங்களிலும், இதன் மூலம் இன்னும் பயனடையாத சமூகங்களிடையேயும் சென்றடைவதை அதிகரிக்க, சுகாதார அமைச்சும் ProtechHealth அமைப்பும் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்.
மேலும் அதிகமான மக்களுக்கு இந்த சுகாதாரப் பரிசோதனைக் கிடைக்க ஏதுவாக, பிரச்சாரங்களை விரிவுபடுத்துதல், அரசு சாரா நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளுதல் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் அரசாங்கம் தீவிரப்படுத்த வேண்டும் என Dr லிங்கேஷ் வலியுறுத்தினார்.