
ஷா ஆலாம், ஜூலை-24- புகைமூட்டத்தால், பிள்ளைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை என்றால் பரவாயில்லை என, சிலாங்கூர் அரசாங்கம் கூறியுள்ளது.
மாணவர்களின் ஆரோக்கியம் கருதி அந்தத் தளர்வு வழங்கப்படும்; ஆனால், பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ அது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரியப்படுத்த வேண்டும்.
பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் (Jamaliah Jamaluddin) அதனைத் தெரிவித்தார்.
தத்தம் பகுதிகளில் API எனப்படும் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீட்டை பள்ளித் தலைமையாசிரியர்களும் முதல்வர்களும் அணுக்கமாகக் கண்காணித்து வர வேண்டும்; வானிலை மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தபடி உரிய உடனடி நடவடிக்கைகளை எடுக்க அதுவ அவசியெமன ஜமாலியா சொன்னார்.
API குறியீடு 200-ரை, அதாவது மிகவும் ஆரோக்கியமற்ற நிலையைத் தாண்டினால், PdPR எனும் வீட்டிலிருந்து கற்றல்-கற்பித்தல் முறைக்கு பள்ளிகள் மாறலாம் என, கல்வி அமைச்சு முன்னதாகக் கூறியிருந்தது.
சிலாங்கூரில் முன்னதாக API குறியீடு 150-தாக இருந்த பெட்டாலிங் ஜெயா, பந்திங், கிள்ளான், ஜோஹான் செத்தியா போன்ற இடங்களில் தற்போது அக்குறியீடு 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.