
புக்கிட் காயு ஹித்தாம், ஆகஸ்ட் 11 – நேற்று, புக்கிட் காயு ஹித்தாமில், மேற்கொண்ட சோதனையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஏழு வெளிநாட்டினரை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS வெற்றிகரமாக தடுத்து வைத்துள்ளது.
அவர்கள் உண்மையான சுற்றுலாப் பயணிகள் அல்ல என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ICQS வளாகத்தில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டதாக AKPS தளபதி, மூத்த உதவி ஆணையர் முகமட் நசாருதீன் எம் நசீர் தெரிவித்துள்ளார்.
குடிநுழைவுத்துறையின் நிலையான வழிமுறைகளுக்கு ஏற்ப தேவையான ஆவணங்கள் மற்றும் நுழைவு நிபந்தனைகளை அவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்றும், அவர்கள் வைத்திருந்த எல்லைப் பாஸ்கள் சேதமடைந்திருப்பதும், செல்லுபடியாகும் கடப்பிதழ்கள் இல்லாததும் சோதனையில் கண்டறியப்பட்டது.
தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஆறு பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் மட்டும் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் அறியப்படுகின்றது.
அவர்கள் அனைவரும் ஒரே நுழைவுப் பாதை வழியாக தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.