
தஞ்சோங் ரம்புத்தான், ஜனவரி-12 – பேராக், தஞ்சோங் ரம்புத்தான், புக்கிட் கிண்டிங்கில், சுமார் 2 வயது ஆகும் ஒரு புலி, வனவிலங்குத் துறையான PERHILITAN அமைத்த வலையில் சிக்கியது.
சில வாரங்களாக புலி நடமாட்டம் குறித்தும் மாடுகள் தாக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்களிடமிருந்து புகார்கள் கிடைத்து வந்தன.
இதையடுத்து அவ்விடத்தில் வலை மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இந்நிலையில், வனவிலங்குத் துறையினர், புலியின் காலடிச் சுவடுகளை பின்தொடர்ந்து அதன் இருப்பிடத்தை கண்டறிந்தனர்.
நேற்று காலை 10 மணியளவில் 75 கிலோ எடையிலான அப்புலி வலையில் சிக்கியது.
என்றாலும், அது எற்கனவே Bukit Bangong பொழுதுபோக்கு பகுதியில் தேடப்பட்டு வரும் புலி அல்ல என்பதை PERHILITAN அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ஒருவேளை, தேடப்படும் புலியின் குட்டியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் பிடிக்கப்பட்ட புலி உடல்நலப் பிரச்னை ஏதுமின்றி பாதுகாப்பாக வனவிலங்கு சரணாலயத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்படும்.
புலி சிக்கியுள்ள போதும், அப்பகுதி மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கவும், அருகிலுள்ள காடுகளுக்குள் செல்லாமல் இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



