குவாலா திரங்கானு, நவம்பர்-27, திரங்கானு, குவாலா நெரூஸ், புக்கிட் துங்கால் அருகேயுள்ள எண்ணெய் நிலையத்தில் சிறார் கடத்தப்பட்டதாக பரவிய தகவல் உண்மையல்ல.
அது யாரோ கிளப்பி விட்ட புரளியென குவாலா திரங்கானு போலீஸ் கூறியது.
திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படும் அச்சம்பவம் குறித்து இதுவரை தாங்கள் புகாரேதும் பெறவில்லையென, மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் அஸ்லி மொஹமட் நோர் (Azli Mohd Nor) கூறினார்.
உண்மையிலேயே யாராவது கடத்தப்பட்டிருந்தாலோ அல்லது கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டாலோ, மேல் நடவடிக்கை எடுக்கப்பட ஏதுவாக, முறைப்படி போலீசில் புகாரளிக்க வேண்டும்.
அதை விடுத்து, உறுதிபடுத்தப்படாத மற்றும் பொய் செய்திகளை பகிர்ந்து, மக்கள் மத்தியில் வீண் பதற்றத்தை உருவாக்கக் கூடாதென அவர் கேட்டுக் கொண்டார்.
புக்கிட் துங்கால் எண்ணெய் நிலையமருகே, நீல நிற பெரோடுவா காரில் வந்த மர்ம நபர், பள்ளி மாணவரைத் துரத்தியதாகவும், ஆனால் அம்மாணவர் அருகிலிருந்த பீசாங் கோரேங் கடை பக்கமாக ஓடி தப்பித்ததாகவும் சமூக ஊடகங்களில் முன்னதாக செய்தி வைரலானது.