
புத்ராஜெயாவில் அன்வார்–மோடி சந்திப்பு; 11 MoU ஒப்பந்தங்கள் கையெழுத்து
புத்ராஜெயா, பிப்ரவரி-8,
புத்ராஜெயாவில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய அறிவிப்புகளை கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
1957-ஆம் ஆண்டு முதல் நீடித்து வரும் உறவுகள் 2024-ல் _’முழுமையான வியூக ஒத்துழைப்பு’_ நிலைக்கு உயர்த்தப்பட்டதை நினைவுகூர்ந்த அன்வார், வரலாற்று பிணைப்புகள், மக்களுக்கும் மக்களுக்குமான தொடர்புகள் மற்றும் விரிவடைந்துவரும் பொருளாதார ஒத்துழைப்பை வலியுறுத்தினார்.

வணிகம், முதலீடு, _semiconductors_, டிஜிட்டல் பொருளாதாரம், உள்ளூர் நாணயத்தில் வர்த்தகம், இணைப்பு, ஆற்றல், விவசாயம், உணவுப் பாதுகாப்பு, தற்காப்பு, கல்வி, TVET தொழில்நுட்பக் கல்வி, திருவள்ளுவர் மையம், சுகாதாரம், சுற்றுலா, கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
முக்கியமாக, அமைதிக்காப்பு நடவடிக்கைகள், _semiconductor_, சுகாதாரம், தற்காப்பு உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
2025-ல் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் 18.59 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்த நிலையில், அதை மேலும் விரிவுபடுத்த இணக்கம் காணப்பட்டது.
மலேசிய ரிங்கிட் மற்றும் இந்திய ரூபாயை பயன்படுத்தி இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தமும் எட்டப்பட்டது.
கல்வி துறையில், இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களைப் பாராட்டிய அன்வார், ஏராளமான மலேசிய மாணவர்கள் இந்தியாவில் மேற்கல்வி பெறும் வாய்ப்புகளை விரிவுபடுத்த விருப்பம் தெரிவித்தார்.
சுற்றுலா மற்றும் தொடர்பை வலுப்படுத்த, விசா சலுகைகள் மற்றும் விமான சேவைகளை அதிகரிக்கவும் இரு நாடுகளும் ஆர்வம் காட்டியுள்ளன.
உலகளாவிய அமைதி முயற்சிகளில், யுக்ரேய்ன், ரஷ்யா, மத்திய கிழக்கு, குறிப்பாக காசா பிரச்னையில் பிரதமர் மோடியின் உறுதியான பங்களிப்பையும் அன்வார் பாராட்டினார்.
நல்லிணக்கத்தின் அடையாளமாக, சபா, கோத்தா கினாபாலுவில் புதிய தூதரகத்தைத் திறக்கும் புது டெல்லியின் முடிவுக்கும் மலேசியா உடனடியாக ஆதரவு தெரிவித்தது.
முன்னதாக புத்ராஜெயாவில் மோடிக்கு சடங்குப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், _“மலேசிய–இந்திய உறவை வலுப்படுத்தும் புதிய அத்தியாயம்”_ எனக் கூறி, பிரதமர் அன்வார் மோடிக்கு தடபுடலாக விருந்தளித்தார்.
_’Friendship Appetisers’_ அல்லது நட்புணவுப் பரிமாறல் என்ற தலைப்பில் நடந்த விருந்தில், சிறுதானிய அடிப்படையில், இந்திய மற்றும் தென்கிழக்காசிய சுவைகளை இணைத்து ஆரோக்கியமான உணவுகள் பரிமாறப்பட்டன.
2-நாள் மலேசியப் பயணமாக வந்துள்ள மோடி இன்று அதனை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார்.



