
கோலாலம்பூர், ஜூலை 3 – புத்ரா ஹைட்ஸ்சில் எரிவாயு குழாய் வெடித்து தீப்பற்றிய சம்பவம் குறித்து மற்றொரு விசாரணை நடத்த வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை சிலாங்கூர் மந்திரிபெசார் அமிருடின் ஷாரி நிராகரித்தார். ஏற்கனவே 212 சாட்சிகள் சம்பந்தப்பட்ட விசாரணையை மீண்டும் நடத்த வேண்டும் என்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லையென அவர் கூறினார்.
மற்றொரு விசாரணையை மீண்டும் A முதல் Z வரை தொடங்குவதற்கு அவசியம் இல்லை. இதற்காக மேலும் எட்டு மாத காலத்தை விரயமாக்க வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பினார். மாநில அரசாங்கம் விசாரணையில் சம்பந்தப்படவில்லை. மாறாக ஊராட்சித்துறைகள் , அருகேயுள்ள மேம்பாட்டாளர்கள், பதுகாவலர், மண் தோண்டும் பணியில் ஈடுபட்டவர், மற்றும் பெட்ரோனாஸ் அதிகாரிகளுடன் மாநில அரசாங்கமும் சாட்சியாளராகத்தான் இருந்தது.
விசாரணையின் முடிவில் அதிருப்தி தெரிவித்த கம்போங் கோலா சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கத்திற்கு அமிருடின் பதிலளித்தபோது இதனை தெரிவித்தார். விசாரணையின் முடிவை மறுபரிசீலிக்கும்படி அந்ந சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஏப்ரல் 1 ஆம் தேதியன்று நடந்த வெடிப்பு மற்றும் தீ விபத்து தொடர்பாக விசாரணையாளர்ளுக்கு அலட்சியம் அல்லது நாசவேலைக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதால், மேல் நடவடிக்கை தேவையில்லை என விசாரணை வகைப்படுத்தப்பட்டுள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் உசேய்ன் ஒமார் கான் ( Hussein Omar Khan ) கூறியிருந்தார். எனினும் புதிய ஆதாரங்கள் வெளிவந்தால் விசாரணையை மீண்டும் நடத்த முடியும் என அவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றவுடன் முழு விசாரணை அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படும் என அமிருடின் கூறினார்.