
பூச்சோங், ஏப்ரல்-2 – பூச்சோங், புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய கருணை விடுப்பு மற்றும் தளர்வுப் போக்கான வேலை ஏற்பாடுகள் வழங்குவது குறித்து
பரிசீலிக்குமாறு, மனிதவள அமைச்சான KESUMA முதலாளிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் சந்தித்துள்ள சேதம் மற்றும் சொத்து இழப்புகளை இந்த விஷயத்தை முதலாளிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதே சமயம், பாதிப்பிலிருந்து மீண்டு வரும் காலத்தில் வேலைக்குச் செல்ல முடியாத ஊழியர்களுக்கு, தொழில் சட்டத்தின் பிரிவு 60P-யின் கீழ் வழங்கப்பட்டுள்ளபடி, தங்கள் முதலாளிகளிடமிருந்து தளர்வுப் போக்கான வேலை ஏற்பாட்டுக்கு விண்ணப்பிக்க KESUMA அவர்களை ஊக்குவிக்கிறது.
இந்த இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் விண்ணப்பங்களை முதலாளிகள் நன்கு பரிசீலனை செய்வதோடு, ஒரு பொருத்தமான காலத்திற்கு அதை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வேளையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முழு ஆதரவை வழங்கவும், அவர்களின் மீட்சியை விரைவுபடுத்தவும், அனைத்து KESUMA துறைகளும் நிறுவனங்களும் மற்ற அரசு அமைப்புகளுடன் ஒத்துழைக்கக் களத்தில் இறங்கியுள்ளன.
அதிர்ச்சி மற்றும் உடல் ரீதியான பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு உதவி வழங்குவதற்காக, தற்காலிக நிவாரண மையங்களுக்கும் 9 மருத்துவமனைகளுக்கும் Socso Prihatin படை அனுப்பப்பட்டுள்ளதும் அவற்றில் அடங்கும்.
Skim Keilatan எனப்படும் முடக்கத்தன்மைக்கான இழப்பீட்டு அனுகூலங்களைப் பெறும் பாதிக்கப்பட்டவர்களை, சமூகப் பாதுகாப்பு நிறுவனமான SOCSO அடையாளம் கண்டு, அவர்களுக்கு பணப்பட்டுவாடா செலுத்தவும் ஏற்பாடு செய்து வருகிறது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எந்தவொரு SOCSO பங்களிப்பாளரும், பாதிக்கப்பட்ட காயத்தின் அளவைப் பொறுத்து, தற்காலிக உடல் செயலிழப்பு மற்றும் நிரந்தர ஊனம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தங்கள் கோரிக்கைகளைச் சரிபார்க்கலாம்.
நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் எரிவாயு குழாயிலிருந்து 500 மீட்டர் பரப்பளவு எரிந்து, பல வீடுகள் மற்றும் வாகனங்கள் பாதிக்கப்பட்டன.
111 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.