மலாக்காவில் மூவர் சுடப்பட்ட விவகாரம் தொடக்கத்திலேயே ஏன் கொலையாக விசாரணை நடத்தவில்லை? – குலசேகரன்

கோலாலம்பூர், டிச 17 -மலாக்கா, Durian Tunggalலில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை , சம்பவம் நடந்த உடனேயே கொலையாக போலீசார் ஏன் விசாரிக்கவில்லை என்று DAPயின்
ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டம் மற்றும் அமைப்புகளின் சீரமைப்புக்கான துணை அமைச்சருமான எம். குலசேகரன் வினவியுள்ளார்.
தொடக்கத்தில் விசாரணை எந்த பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டது என போலீஸ் மற்றும் சட்டத்துறை அலுவலகம் தெளிவுப்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புக்கிட் அமானின் விசாரணையை கொலையாக மறுவகைப்படுத்துவதற்கான சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் பரிந்துரையை குலசேகரன் வரவேற்றார்.
ஆனால் இது பதிலளிக்கப்படாத பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எந்த விதியின் கீழ் விசாரணை முதலில் வகைப்படுத்தப்பட்டது, தொடக்கத்திலேயே ஏன் கொலை விசாரணை தொடங்கப்படவில்லை .
மறுவகைப்படுத்தல் வரவேற்கக்கூடியதாக இருந்தாலும் விசாரணை விரைவாகவும் முழுமையாகவும் நடத்தப்பட்டால் மட்டுமே அரசாங்க அமைப்புகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பெறமுடியும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் குலசேகரன் வலியுறுத்தினார்.
அனைத்து ஆதாரங்களும் பாதுகாக்கப்படுவதையும், சாட்சிகளின் தகவல்கள் புதிதாக இருக்கும்போதே பதிவு செய்யப்படுவதையும் உறுதிசெய்ய, கொலை விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்தார்.
விசாரணையின் முடிவு அதிகாரிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் திறனில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று குலசேகரன் கூறினார்.
சுடப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசாரணை தொடர்பாக உறுதிமொழியும் நம்பிக்கையும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



