
கோலாலம்பூர், ஏப் 9 – பூச்சோங்கில் உள்ள ஒரு வீட்டில் ஆடவர் பெட்ரோல் குண்டு வீசும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து அச்சம்பவத்தை வலைத்தலவாசிகள் கடுமையாக சாடியுள்ளனர்.
பேஸ்புக் பதிவின்படி, இந்த சம்பவம் ஏப்ரல் 7 ஆம் தேதி திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆடவர் ஒருவர் வீட்டிற்கு தீ வைக்க பெட்ரோல் குண்டு வீசியதால் ஒரு நாய் கிட்டத்தட்ட எரிந்து போனது. அந்நபர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசுவதை மலேசிய விலங்கு சங்கத்தின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளியில் பார்க்க முடிந்தது.
ஒன்று அந்த வீட்டின் முற்றத்திலும் மற்றொன்று வீட்டின் வரந்தாவில் அமர்ந்திருந்த செல்ல நாய் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தினால் நாய்க்கு அச்சம் மற்றும் தொல்லை ஏற்படுத்தியதன் தொடர்பில் 2015ஆம் ஆண்டின் பிராணிகள் நலன் சட்டத்தின்கீழ் விசாரணை தொடங்கும்படி போலீசிற்கு நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர்.
தீயினால் பாதிக்கப்பட்ட நாயின் நிலைமை என்னவானது என்பதோடு இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.