
பூச்சோங், டிசம்பர்-6 – சிலாங்கூர், பூச்சோங் பெர்மாய் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில், தொப்புள் கொடி அறுக்கப்படாத ஆண் சிசு பல்நோக்கு பையினுள் கண்டெடுக்கப்பட்டது.
அதனை புதன்கிழமை மாலை பொது மக்கள் கண்டெடுத்து போலீசுக்குத் தகவல் கொடுத்ததாக, சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் வான் அஸ்லின் வான் மாமாட் (Wan Azlan Wan Mamat) கூறினார்.
சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் துணி எதுவும் இல்லாமல் அக்குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
சிகிச்சைக்காக செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2.84 கிலோ கிராம் எடையும் 54 சென்டிமீட்டர் நீளமும் கொண்ட அக்குழந்தை, தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக வான் அஸ்லான் சொன்னார்.
அந்த பச்சிளங் குழந்தை அங்கு கைவிடப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.