
கோலாலம்பூர், பிப்ரவரி-24 – மனித உரிமை அமைப்பான SUARAM-மின் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் அசுரா நாஸ்ரோன் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மறுபரிசீலனை செய்யும் பொருட்டு குற்றச்சாட்டு ஒத்தி வைக்கப்படுவதாக, விசாரணை அதிகாரிகள் இன்று மாலை அழைத்து அவ்விவரத்தைத் தெரிவித்ததாக, SUARAM உறுதிப்படுத்தியது.
எனினும், குற்றம் சாட்டப்படுவதற்கான புதியத் தேதி குறித்து தெரிவிக்கப்படவில்லை.
பிப்ரவரி 10-ஆம் தேதி உள்துறை அமைச்சான KDN கட்டடத்திற்குள் அனுமதி அட்டையின்றி நுழைந்ததன் பேரில், சிவன் துரைசாமி முன்னதாக போலீஸ் விசாரணைக்குப் அழைக்கப்பட்டார்.
SOSMA கைதிகளின் நலன் குறித்து விளக்கம் கோரும் மகஜரைச் சமர்ப்பிக்க SUARAM சார்பில் சிவன் உள்ளிட்டோரும், SOSMA கைதிகளின் குடும்பத்தாரும் KDN சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், இன்று நண்பகல் மக்களவையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அவ்விருவரையும் குற்றம் சாட்டும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.
அவர்களின் மகஜரைப் பெற்றுக் கொண்டு KDN கையெழுத்திட்டிருக்கிறது.
தவிர, அனுமதி அட்டை இல்லாமலேயே மகஜரைக் கொடுக்க வரலாமென KDN அதிகாரி ஒருவர் அவர்களை உள்ளே அழைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆகவே, அதில் ஆழமான விசாரணை மேற்கொண்ட பிறகே குற்றம் சாட்டுவது தொடர்பில் முடிவெடுக்க வேண்டுமென ராயர் வலியுறுத்தியிருந்தார்.
ராயர் அக்கோரிக்கையை முன் வைத்த சில மணி நேரங்களிலேயே, சிவன் மற்றும் அசுரா மீதான நாளைய குற்றச்சாட்டு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.