
கோலாலம்பூர், ஆகஸ்ட்- 8தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள் ‘lembu betina’ அல்லது பசுமாடுகள் என்ற ஒப்பீட்டை பாஸ் கட்சித் தலைவர்கள் தற்காத்து பேசி வருவது குறித்து, பி.கே.ஆர் துணைத் தலைவர் நூருல் இசா பெருத்த ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
இது இஸ்லாமிய மதிப்புகளை பிரதிபலிக்கவில்லை என்றார் அவர்.
அவர் அவ்வாறு குறிப்பிட்டது… பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Datuk Tuan Ibrahim Tuan Matடைப் பற்றி தான்.
மாரான் பாஸ் இளைஞர் அணியின் தகவல் பிரிவுத் தலைவர் Salman Al Faris கருத்துகளை வெறும் உவமையாக மட்டுமே பார்க்க வேண்டும், மாறாக பெண்களை அவமதிக்கும் ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற ரீதியிதில் துவான் இப்ராஹிம் பேசியிருந்தார்.
எனினும் நூருல் இசா அந்த விளக்கத்தை ஏற்கவில்லை.
முதலில், சர்ச்சைக்குரிய அந்த கருத்தே திரும்பப் பெறப்படவில்லை; இப்போது அதே கட்சியின் மூத்த தலைவர் அதனை ஆதரித்து பேசுகிறார். இது அதிர்ச்சியும் ஏமாற்றத்தையும் தருகிறது” என நூருல் இசா கூறினார்.
சொந்தக் கட்சிக்காரர் என்பதால் அவர் தற்காத்து பேசலாம்; ஆனால் அக்கூற்றுக்கு என்ன அர்த்தம் என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்றார் அவர்.
இஸ்லாம் ஒருபோதும் பெண்களை அவமதித்தது கிடையாது; அதுவும் அர்ப்பணிப்பு உணர்வோடு தலைமைப் பொறுப்பில் உள்ள பெண்களை அவமதித்ததே இல்லை.
எனவே பெண்களை விலங்குகளுடன் ஒப்பிடும் இத்தகையச் செயல் இன்றும் தொடருவது வேதனைக்குரியது.
அதுவும், இஸ்லாத்தைத் தூக்கி நிறுத்துகிறோம் என பீற்றிக் கொள்ளும் கட்சியினருக்கு இது அழகல்ல என, ஓர் அறிக்கை வாயிலாக நூருல் இசா சுட்டிக் காட்டினார்.
அந்த பாஸ் இளைஞர் தலைவரின் பேச்சுக்கு, அரசியல்வாதிகள், அரசு சாரா அமைப்புகள், பெண்ணுரிமை போராட்டவாதிகள் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.