
வாஷிங்டன், ஜனவரி 23 – Elon Musk-கின் நிறுவனமான xAI உருவாக்கிய ‘க்ரோக்’ (Grok) என்ற செயற்கை நுண்ணறிவு கருவி, சில நாட்களிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளின் படங்களைத் தவறான முறையில் மாற்றி, சுமார் 30 லட்சம் படங்களை உருவாக்கியுள்ளது என ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த கருவியில் சேர்க்கப்பட்ட புதிய வசதியின் மூலம், பயனர்கள் படங்களிலுள்ள நபர்களின் உடைகளை நீக்குவது போன்ற மாற்றங்களை எளிதாக செய்ய முடிகின்றது. இதனால் இணையத்தில் அநாகரிகமாக மாற்றப்பட்ட படங்கள் அதிக அளவில் பரவி வருகின்றன.
ஆய்வின் படி, 11 நாட்களில் உருவான படங்களில் சுமார் 23,000 படங்கள் குழந்தைகளைச் சித்தரிப்பதாக கூறப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட சில நாடுகள் க்ரோக் பயன்பாட்டுக்கு தடை விதித்தன. தற்போது, சில நாடுகளில் இவ்வகை படங்களை உருவாக்கும் வசதியை X நிறுவனம் கட்டுப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பல நாடுகளில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



