
சிரம்பான், ஏப்ரல் 7 – கடந்த மாதம் ஒரு பெண்ணை குத்தியதாக குற்றச்சாட்டை எதிர்கொண்ட இராணுவ வீரர் ஒருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தனக்கு எதிரான குற்றச்சாட்டை 35 வயதுடைய அப்துல் ஹபிஸ் அபு பாக்கார் ( Abdul Hafiz Abu Bakar ) மறுத்தார். அவர் மீது சிரம்பான் மாஜிஸ்திரேட் சைட் பாரிட் சைட் அலி (Syed Farid Syed Ali) முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது. மார்ச் ஆம் 29 ஆம் தேதியன்று இரவு மணி 10.20 அளவில் , செனாவாங்கின் தாமான் சத்ரியாவில் 28 வயதுடைய பெண்ணின் தலையில் வேண்டுமென்றே குத்தியதாக அப்துல் ஹபிஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் ஒரு ஆண்டு சிறை அல்லது கூடியபட்சம் 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 323 ஆவது பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. முகமட் ஹபிஸிற்கு ஒரு நபர் உத்தரவாதத்தின் கீழ் இரண்டாயிரம் ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. கடந்த மாதம், தைபானுக்கு அருகே செனாவாங்கில் வாகன ஓட்டுநரான ஒரு பெண், ஆடவரால் குத்தப்படுவதை காட்டும் 22 வினாடி வீடியோ வைரலாகியதோடு அது ஊடகங்களில் செய்தியாக வெளியானது. சாலையைக் கடக்கும்போது தனது குழந்தையை வாகன ஓட்டுநர் மோதியதாகக் கூறி அந்த நபர் கோபமடைந்ததை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.