
கோலாலாம்பூர், ஜனவரி-9 – PN எனப்படும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை பாஸ் கட்சி ஏற்றாலும், அது குறித்து இதர உறுப்புக் கட்சிகள் கலக்கமடையத் தேவையில்லை.
பாஸ் கட்சியின் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
புத்ராஜெயாவைக் கைப்பற்ற, முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்களின் ஆதரவும் தங்களுக்குத் தேவை என்றார் அவர்.
இந்நிலையில், PN புதிய தலைவர் நியமனம் உட்பட நிர்வாகச் சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
கூட்டணிக்கு பாஸ் தலைமையேற்றால் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களின் ஆதரவை பெரிக்காத்தான் இழக்கலாம் என, கெராக்கான், MIPP உள்ளிட்ட PN உறுப்புக் கட்சிகள் கவலை தெரிவித்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகின.
அதற்கு பதிலளித்த ஹாடி, தலைமைப் பிரச்னைகள் தீர்ந்தவுடன் அந்தக் கவலைகள் தானாக மறையும் என்றார்.
ஹாடி ஆயிரம் கூறினாலும், வரவிருக்கும் தேர்தல்களில், பாஸ் கட்சியின் இஸ்லாமிய அடையாளத்தையும், கெராக்கா, MIPP கட்சிகளின் பல்லின அணுகுமுறையையும் சமநிலைப்படுத்துவதே பெரிக்காத்தானுக்கு முக்கிய சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தான் ஸ்ரீ முஹிடின் யாசின் அண்மையில் பதவி விலகியதை அடுத்து, பெரிக்காத்தானுக்குத் தலைமையேற்க பாஸ் கட்சி வெளிப்படையாகவே அறிவித்து, வேட்பாளரையும் தயார் செய்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.



