
கோலாலம்பூர், ஜூன் 11 – எந்தவொரு கட்சியும் PN எனப்படும் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியைக் கட்டுப்படுத்தவில்லை என்பதால் , அந்த கூட்டணியின் எதிர்காலம் குறித்த முடிவுகளை ஒருதலைப்பட்சமாக எடுக்க முடியாது என்று அதன் தலைவரான அகமட் சம்சுரி மொக்தார் தெரிவித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் மற்றொரு அங்கமான பெர்சத்துவுடனான தனது அரசியல் ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டு வருவதாக பாஸ் கட்சி திங்கட்கிழமையை அறிவித்ததிலிருந்து , பெரிகாத்தான் நேசனல் தொடர்ந்து ஒழுங்கான மற்றும் கொள்கை ரீதியான முறையில் நிர்வகிக்கப்படும் என்று முதல் முறையாக சம்சுரி குறிபிட்டார்.
PN கூட்டணியின் அமைப்பாளர்களில் ஒருவராக பாஸ் இருந்ததோடு அந்த கூட்டணியின் பதிவு நடவடிக்கையில் தாமும் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டிருந்ததாக பாஸ் கட்சியின் உதவித் தலைவருமான சம்சுரி சுட்டிக்காட்டினார்.
PN எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானது அல்ல என்பதை தாம் வலியுறுத்த விரும்புவததோடு அதை தோற்றுவித்த கட்சிகளுக்கு இடையிலான ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் நிறுவப்பட்ட அரசியல் கூட்டணியாகும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
கூட்டணியின் நிலைப்பாடு மற்றும் இலக்கு குறித்த முடிவுகளை எந்த ஒரு கட்சியும் எடுக்க முடியாது. அவை PN-னின் சட்டவிதிகளின் மூலம் , கூட்டணியின் அதிகாரப்பூர்வ வழிகள் மூலமாகவே தீர்மானிக்கப்பட வேண்டும் என சம்சுரி குறிப்பிட்டார்.
பெர்சத்துவுடனான தனது அரசியல் ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவர கட்சியின் மத்திய செயலவை முடிவு செய்துள்ளதாக திங்கட்கிழமையன்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அறிவித்திருந்தார்.
பெர்சத்துவால் ஏற்பட்ட பல விவகாரங்கள் இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவைச் சீர்குலைத்துள்ளதாக ஹாடி கூறிவந்த மூன்று வாரங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.



