
கோலாலாம்பூர், பிப்ரவரி-22-எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலின் புதியத் தலைவராக, பாஸ் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சம்சுரி மொக்தார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்று கோலாலாம்பூரில் நடைபெற்ற பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றத்தின் அவசரக் கூட்டத்தில் ஒருமனதாக அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
தான் ஸ்ரீ முஹிடின் யாசின் ஜனவரி 1 முதல் அப்பதவியிலிருந்து விலகியதை அடுத்து, திரெங்கானு மந்திரி பெசாருமான சம்சுரி தலைவராகியுள்ளார்.
முஹிடின் கடைசியாக தலைமைத் தாங்கிய இந்த உச்சமன்றக் கூட்டத்தில், பாஸ் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், கெராக்கான் தலைவர் டத்தோ டோமினிக் லாவ். மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP தலைவர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இவ்வேளையில், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவியை பாஸ் கட்சியே தன் வசம் எடுத்துக் கொள்ளவும், இன்றையக் கூட்டத்தில் பெரிக்காத்தான் உறுப்புக் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
எனினும், தங்கள் தரப்பில் யார் அப்பதவியை ஏற்பார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும், அதற்கு சற்று கால அவகாசம் வேண்டுமென்றும், பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
நடப்பு எதிர்கட்சித் தலைவராக உள்ள டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின், கடந்த வாரம் பெர்சாத்து கட்சியிலிருந்தே நீக்கப்பட்டதை அடுத்து, அவரின் அப்பதவி கேள்விக் குறியாகி வந்த நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாஸ் கட்சி எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்கிறது.



