
கோலாலம்பூர், டிசம்பர்-28 – பதவி விலகியுள்ள பெர்லிஸ் மந்திரி பெசாருக்கு எதிரான அரசியல் சதி குற்றச்சாட்டுகள் குறித்து பெரிகாத்தான் நேஷனல் உச்ச மன்றம் கண்டிப்பாக விவாதிக்க வேண்டும் என, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ துவான் இப்ராஹிம் துவான் மான் வலியுறுத்தியுள்ளார்.
ஷுக்ரி ரம்லிக்கு வழங்கி வந்த ஆதரவை 5 பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டுள்ளனர்.
ஆனால், ஆதரவை மீட்டுக் கொள்ளுமாறு உத்தரவு ஏதும் தரப்படவில்லை என, பெர்சாத்து தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் கூறியுள்ளார்.
பெர்லிஸ் ராஜா ஆணைக்கேற்பவே, புதிய மந்திரி பெசார் வேட்பாளர் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டன; இந்நிலையில், அங்கு என்னதான் நடந்தது, நடக்கிறது என்பது பற்றி பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம் பெறப்படும் என முஹிடின் தெரிவித்தார்.
எது எப்படி இருந்தாலும், அந்த ஐவரின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று; காரணம் பாஸும் பெர்சாத்துவும் ஒரே கூட்டணிக் கட்சிகளாகும்.
இப்போது பெர்லிஸில் தேவையில்லாமல் அரசியல் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது குறித்து பெரிக்காத்தான் உச்சமன்றம் விவாதித்தே ஆக வேண்டும் என துவான் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
வெளிப்படைத்தன்மைக்கும், கூட்டணிக்குள் உட்பூசல் குழப்பங்களைத் தவிர்க்கவும் இது முக்கியம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
முன்னதாக அந்த 5 பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்துகொண்டு ஆதரவை மீட்டுக் கொண்ட 3 பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டனர்.



