
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-13-அண்மைய பெர்லிஸ் அரசியல் நெருக்கடியில் பாஸ் கட்சிக்கு பெர்சாத்து ஒருபோதும் துரோகம் இழைக்கவில்லை என, அதன் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
“மந்திரி பெசார் மாற்றம் பெர்லிஸ் ராஜாவின் முடிவு; இதில் நானோ பெர்சாத்துவோ கீழறுப்பு வேலை எதிலும் ஈடுபடவில்லை” என்றார் அவர்.
“அரண்மனை எடுத்த முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். இதில் முதுகில் குத்தினோம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என நேற்றிரவு பெர்சாத்து உச்சமன்றக் கூட்டத்திற்குத் தலைமையேற்றப் பிறகு அவர் சொன்னார்.
முன்னதாக, பாஸ் மந்திரி பெசார் ஷுக்ரி ரம்லிக்கு வழங்கி வந்த ஆதரவை, 5 பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்களும், 3 பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் மீட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் 15 தொகுதிகள் கொண்ட பெர்லிஸ் சட்டமன்றத்தில் ஷுக்ரி ரம்லி பெரும்பான்மை இழந்தார்.
சில நாட்களிலேயே உடல் நலத்தைக் காரணம் காட்டி பதவியும் விலகினார்.
பிறகு பெர்சாத்துவின் அபு பாக்கார் ஹம்சாவை பெர்லிஸ் அரண்மனை புதிய மந்திரி பெசாராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ் கட்சி, ஆட்சிக் குழுவில் பங்கேற்ற மாட்டோம் என அறிவித்தது.
அன்றிலிருந்து, சதி செய்து மந்திரி பெசார் பதவியை பெர்சாத்து பறித்து விட்டதாக பாஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.



