
பேங்காக், செப் 11 – பேங்காக்கில் உயிரியல் பூங்கா பராமரிப்பாளர் ஒருவரை பார்வையாளர்கள் முன்னிலையில் சிங்கங்கள் கடித்துக் குதறியதால் அவர் பரிதாபமாக மாண்டார்.
தனது காரிலிருந்து கீழே இறங்கிய அந்த பராமரிப்பாளர் மீது ஆறு முதல் ஏழு சிங்கங்கள் தாக்குதல் நடத்தின.
ஆசியாவின் மிகப்பெரிய திறந்தவெளி உயிரியல் பூங்காவில் ஒன்றான Safari World Bangkokகில் இந்த தாக்குதல் நடந்தது.
ஒரு நபருக்கு சுமார் 1,200 பாட் அல்லது 159 ரிங்கிட் விலையில் சிங்கம் மற்றும் புலிக்கு உணவளிக்கும் நடவடிக்கைகளை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு அந்த உயிரியல் பூங்கா வாய்ப்பை வழங்குகிறது.
மரணம் அடைந்தவர் சிங்கங்களுக்கு உணவளிக்கும் அந்த உயிரியல் பூங்காவின் ஊழியர் என்று தேசிய பூங்காக்கள், வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்புத் துறையின் பாதுகாப்பு இயக்குநர் சடுடி புன்புக்டி (Sadudee Punpugdee) கூறினார்.
ஒரு மனிதர் திறந்த காரில் இருந்து இறங்கி, அந்த விலங்கிற்கு முதுகைக் காட்டி தனியாக நின்ற செயல் மிகவும் விசித்திரமாக இருந்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பார்வையாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.
அவர் சுமார் மூன்று நிமிடங்கள் அங்கேயே நின்றதை தொடர்ந்து ஒரு சிங்கம் மெதுவாக நடந்து வந்து பின்னால் இருந்து அவர் மீது பாய்ந்ததாகவும் அவர் கூச்சல் போடவில்லை என்றும் அந்த பார்வையாளர் மேலும் கூறினார்.
அந்த பூங்காவில் உள்ள அனைத்து சிங்கங்களுக்கும் உரிமம் இருப்பதாக அடையாளம் கூறப்படாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.