
பேரங்காடி கார் நிறுத்துமிடத்தில் கையில் கத்தியோடு மாணவியைத் துரத்தியை 50 வயது ஆடவர் கைது
மலாக்கா, பிப்ரவரி-9,
மலாக்காவில் ஒரு மர்ம நபர் கத்தியை வைத்துக் கொண்டு துரத்தியதால், 21 வயது பல்கலைக்கழக மாணவியும் அவரின் இளைய உடன்பிறப்பும் பரபரப்பான நிமிடங்களை எதிர்கொண்டனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 9.30 மணி வாக்கில் Taman Lagenda-வில் உள்ள பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் நிகழ்ந்தது.
காருக்குள் ஏறுவதற்காக குடும்ப உறுப்பினர்களுக்காகக் காத்திருந்த போது, 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் அவர்களை நெருங்கியுள்ளார்.
கையில் கத்தியோடு அவர்களை நோக்கி அந்நபர் சம்பந்தமே இல்லாமல் கத்தியதால், பாதிக்கப்பட்ட இருவரும் பயத்தில் பேரங்காடிக்குள் ஓட்டம் எடுத்தனர்.
துரத்திச் சென்ற ஆடவர் தவறி விழுந்ததால், சகோதரிகள் தப்பினர்.
நல்லவேளையாக அவர்களுக்குக் காயமேதும் ஏற்படவில்லை.
அலோர் கானாவைச் சேர்ந்த சந்தேக நபர் சில மணி நேரங்களுக்குப் பிறகு போலீஸாரால் பிடிபட்டார்.



