
ஈப்போ, பிப்ரவரி-13 – பேராக்கின் முக்கியப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள நீர் விநியோகத் தடை மார்ச் 1 வரை நீடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 6 முதல் பேராக்கின் பாத்தாங் பாடாங் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகளையும், ஹிலிர் பேராக் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய 50,000 பயனர் கணக்குகளை இந்த நீர் விநியோகத் தடை பாதித்துள்ளது.
இந்த நீர் தடை நெடுகிலும் பயனர்களின் சிரமங்களைப் போக்க தண்ணீர் டாங்கிகள் நிறுத்தப்படும்.
அதே சமயம் இன்று நள்ளிரவு தொடங்கி மார்ச் 1 வரை நீர் பங்கீட்டு முறை அமுல்படுத்தப்படுமென, பேராக் நீர் வாரியம் LAP அறிவித்துள்ளது.
அதன் அறிக்கையின் படி, தாப்பா, பீடோர் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களின் முழுப் பகுதிகளையும் உள்ளடக்கிய பாத்தாங் பாடாங் மாவட்டத்திற்கு, நீர் பங்கீடு கிடைக்காத தேதிகளாக பிப்ரவரி 14, 15, 18, 19, 22, 23, 26 மற்றும் 27 அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், சுமார் 14 பகுதிகளை உள்ளடக்கிய ஹிலிர் பேராக் மாவட்டத்திற்கு, பிப்ரவரி 16 மற்றும் 17, பிப்ரவரி 20 மற்றும் 21, பிப்ரவரி 24 மற்றும் 25 மற்றும் பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் நீர் விநியோகத்தின் போது நீர் விநியோகம் கிடைக்காது.
ஹிலிர் பேராக் மாவட்டத்தில் நீர் பங்கீட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கம்போங் பாடாங் தேம்பாக், கம்போங் செலாபாக் டாலாம், கம்போங் ப’ஞ்சார், பத்தாக் ரேபிட், பெக்கான் பாரு, கம்போங் பஹாகியா, தாமான் மெலோர், முக்கிம் சுங்கை மானிக், முக்கிம் லாபு குபோங் மற்றும் பல பகுதிகள் அடங்கும்.
தாப்பாவில் உள்ள புக்கிட் தெமோ நீர் சுத்திகரிப்பு நிலையம் அதன் அசல் உற்பத்தி திறனில் 70 சதவீதத்தில் மட்டுமே இயங்குவதாலேயே, நீர் பங்கீடு செய்யப்படுகிறது.
இது குறித்த மேல் விவரங்களை Lembaga Air Perak சமூக அகப்பக்கங்களில் காணலாம்.