
சித்தியவான்,ஆகஸ்ட் 12 – பேராக் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 210 மாணவர்கள் பங்கேற்ற சக்கர வியூகம் சதுரங்க போட்டி அண்மையில் ஆயர் தாவார் தமிழ்ப் பள்ளியில் மிவும் சிறப்பாக நடைபெற்றது.
காலை 8.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணிவரை நடைபெற்ற இப்போட்டியை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ’ ங்கே கூ ஹாம் (Dato’ Ngeh Khoo Ham) கலந்து கொண்டு, உரையாற்றியதோடு , இப்போட்டிக்காக RM2,000 நிதியுதவி வழங்குவதாகவும், வருங்காலங்களில் பள்ளிக்கு சதுரங்கம் தொடர்பான பொருட்களை வாங்கித் தருவதாகவும் அறிவித்தார்.
மேலும் மாணவர்களுக்கு சதுரங்கப் பயிற்சி அளித்து மஞ்சோங் வட்டார தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் சாதனை படைக்கச் செய்த ஆசிரியர் கவியராசு முனுசாமி அவர்களுக்கு “சதுரங்கச்சாரியர்” விருது வழங்கப்பட்டது. இவ்விழாவை ஆண்டு தோறும் நடைபெறும் மாநில அளவிலான சதுரங்க நிகழ்வாக மாற்றும் திட்டம் இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.