
வாஷிங்டன், ஏப்ரல்-21- உலக மகா கோடீஸ்வரர் இலோன் மாஸ்க் உண்மையில் ‘தீய’ எண்ணம் கொண்ட மிக ‘மோசமான மனிதர்’ என தெஸ்லா கார் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஒருவர் குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மாஸ்க், ‘வஞ்சம் வைத்து பழிவாங்கும் குணம் கொண்டவர்’ என்றும் பொறியியலாளரான கிறிஸ்தினா பாலன் கூறினார்.
தெஸ்லா கார்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பிய ஒரே காரணத்திற்காக, அவர் என்னை வேலையிலிருந்து நீக்கினார்.
அவரை விட மாட்டேன்; நிச்சயமாக நீதிமன்றம் செல்வேன் என கிறிஸ்தினா கூறியிருக்கின்றார்.
தெஸ்லா கார்களின் பிரேக் முறையை பாதிக்கக்கூடிய வடிவமைப்புக் கோளாறு குறித்தே கிறிஸ்தினா கேள்வி எழுப்பியுள்ளார்.
மாஸ்கிற்கு நேரடியாக மின்னஞ்சல் அனுப்பி தனது கவலையை அவர் தெரிவித்திருக்கின்றார்.ஆனால், அதற்காக 2014-ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டது தான் மிச்சம்.
தனக்குப் பிறகு, தன்னைப் போலவே தெஸ்லா கார்களின் பாதுகாப்புக் குறித்து கேள்வி எழுப்பிய ஊழியர்களில் 90 விழுக்காட்டினர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கிறிஸ்தினா கூறிக் கொண்டார்.
தன்னை வேலை நீக்கம் செய்தது செல்லாது எனக் கூறி தெஸ்லாவுக்கு எதிராக ஏற்கனவே தொடுத்த வழக்கில் கிறிஸ்தினா வெற்றிப் பெற்றுள்ளார்.
இப்போது அவரின் அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, கலிஃபோர்னியா மேல்முறையீட்டு நீதிமன்றம் இரண்டாவது வாய்ப்பை வழங்கியுள்ளது.
2019-ல் கிறிஸ்தினா தாக்கல் செய்த அவ்வழக்கு இதற்கு முன் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.