
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 -கடந்த 50 ஆண்டுகளில் போதைப்பொருள் தடுப்பு அமலாக்கம் மற்றும் சிகிச்சைக்காக 50 பில்லியனுக்கும் அதிகமாக அரசு செலவிட்டிருந்தாலும், மலேசியா இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஹாமாட் சாஹிட் ஹமிடி ஒப்புக்கொண்டுள்ளார்.
மலேசியாவில் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடும் படித்தவர்களின் எண்ணிக்கையும், செயற்கை மருந்துகளின் பயன்பாடு மற்றும் ஆன்லைன் போதைப்பொருள் விற்பனையும் அதிகரித்து வருவதாக அவர் மேலும் சாடியுள்ளார்.
இனி எந்தவொரு புதிய திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பு, அது தொடர்பான மதிப்பாய்வுகளைச் செய்ய தான் திட்டமிட்டுள்ளதாக மலேசிய போதைப்பொருள் தடுப்பு சங்கத்தின் (PEMADAM) பொதுக் கூட்டத்தில் சாஹிட் தெரிவித்தார்.
இளைய தலைமுறையினருடன் வித்தியாசமான முறையில் தொடர்பு கொள்ள PEMADAM முயற்சி செய்ய வேண்டும் என்றும், வழக்கமான சொற்பொழிவு முறை இனி பயனளிக்காது என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் டிஜிட்டல் தகவல் தொடர்பு பிரிவுகளை அமைத்தல், தன்னார்வலர்களுக்கான மேம்பட்ட பயிற்சிகளை வழங்குதல், ஒருங்கிணைந்த தகவல் போர்டல் மற்றும் கைப்பேசி பயன்பாட்டை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் போதைப்பொருள் விவகாரத்தில் நேர்மைறை விளைவுகளை ஏற்படுத்துமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.