கோலாலம்பூர், அக்டோபர்-3 – கெடாவில் கேளிக்கை மையமொன்றில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைதான அனைத்து 12 போலீஸ்காரர்களையும், பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசியப் போலீஸ் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் (Tan Sri Razarudin Husain) அந்த உடனடி இடைநீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அந்த 12 பேர் தவிர்த்து, 1993-ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அவர்களின் மேலதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கீழ்நிலைப் பணியாளர்களை நிர்வகிப்பதில் தோல்வி கண்ட மேலாளர்கள், நடப்பு பொறுப்புகளிலிருந்து வேறு பணிகளுக்கு மாற்றப்படுவர் என IGP தெரிவித்தார்.
சட்டத்தை மீறினால் அது யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதற்கான கடும் எச்சரிக்கையாக இதை எடுத்துகொள்ளுங்கள்.
இது போன்றவர்களால் போலீஸ் படையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்றார் அவர்.
சுங்கை பட்டாணியில் உள்ள கேளிக்கை மையத்தில் புக்கிட் அமான் மேற்கொண்ட சோதனையில் போதைப்பொருள் உட்கொண்டதாக கைதான 31 பேரில் 12 பேர் போலீஸ்காரர்கள் ஆவர்.
அச்செய்தி டெலிகிராமில் வைரலான நிலையில் IGP அது குறித்து கருத்துரைத்தார்.