
கோலாலம்பூர், பிப் 28 – KLIA விமான நிலையத்தின் 2ஆவது முனையத்திலிருந்து ஜனவரி 28 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 12 ஆம் தேதி சட்டவிரோதமாக மலேசியாவிலிருந்து வெளியேற முயன்ற வியட்னாம் மற்றும் கம்போடியாவைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளில் ஐவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஐவர் உடனடியாக இடமாற்றம் செய்து விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
1990 ஆம் ஆண்டின் பொது அதிகாரிகளுக்கான நடத்தை மற்றும் கட்டொழுங்கு முறைகளின் கீழ் அந்த ஐந்து அதிகாரிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் இன்று வெளியட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விதிமுறைகளை மீறும் அல்லது பொதுச் சேவைத் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
விமானத்தில் ஏறுவதற்கு முன் மூன்று வியட்னாமியர்கள் மற்றும் ஒன்பது கம்போடியர்கள் காத்திருக்கும் இடத்தில் இருந்தபோது அதிகாரிகளால் கண்டுப்பிடிக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் அனைவரிடமும் போலியான மற்றும் சட்டவிரோதமாக பெறப்பட்ட நுழைவு மற்றும் வெளியேறும் ஆவணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
அவர்கள் அனைவரும் குடிநுழைவு சட்டத்தை மீறி மலேசியாவில் கூடுதல் நாட்கள் தங்கியிருந்தனர்.