
பட்டர்வெர்த், ஜனவரி 8 – அபராதங்களைத் தீர்த்து வைக்க முடியும் என கூறி பெண் ஒருவரிடமிருந்து பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் காப்போரல் ஒருவர், இன்று பட்டர்வெர்த் நீதிமன்றத்தில் அக்குற்றத்தை மறுத்துள்ளார்.
குற்றச்சாட்டின் படி, கடந்தாண்டு ஜூன் மாதம், நிபோங் தெபாலில் உள்ள ஒரு வங்கியில், சந்தேக நபர் 53 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம், அவரது இளைய சகோதரருடைய 850 ரிங்கிட் மதிப்பிலான நான்கு போலீஸ் அபராதங்களைக் குறைந்த தொகையான 620 ரிங்கிட்டுக்கு தீர்த்து வைக்கலாம் என கூறி, அத்தொகையை தனது வங்கி கணக்கில் செலுத்த வைத்துள்ளார்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கு நிரூபிக்கப்பட்டால், சிறை அல்லது அபராதம் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வழக்கின் போது, அரசுத் தரப்பு 4,000 ரிங்கிட் ஜாமீன் கோரியிருந்தாலும் தமது குடும்ப பொறுப்புகள் காரணமாக குறைந்த ஜாமீன் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அந்த போலீஸ் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று, நீதிமன்றம் சம்பந்தப்பட்ட அந்நபருக்கு 3,000 ரிங்கிட் ஜாமீன் வழங்க அனுமதியளித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு வரும் பிப்ரவரி 9 ஆம் தேதியன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



