
கோலாலம்பூர், ஜூலை-31- துன் Dr மகாதீர் மொஹமட்டின் 2 மூத்த மகன்கள் குவித்துள்ள சொத்துக்கள் தெளிவற்ற அல்லது சட்டவிரோத வழிமுறைகள் மூலம் பெறப்பட்டது என நிரூபிக்கப்பட்டால், அவற்றை அவர்கள் அரசாங்கத்திடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். மகாதீரின் மகன்கள் அசாதாரண சொத்துக்களைக் குவித்துள்ளனர்; அவ்வளவும் எங்கிருந்து வந்தது என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, அவற்றுக்கான வளங்களை அவர்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்; இல்லையேல் அரசாங்கத்திடம் திருப்பித் தர வேண்டுமென அன்வார் கூறினார்.
முன்னதாக, தான் ஸ்ரீ மொக்சானி மஹாதீர் (Tan Sri Mokhzani Mahathir) 1 பில்லியன் ரிங்கிட்டையும், மிர்சான் மஹாதீர் (Mirzan Mahathir) 246.2 மில்லியன் ரிங்கிட்டையும் தங்களின் மொத்த சொத்துக்களாக MACC-யிடம் அறிவித்தனர்.
மகாதீர் முதன் முறையாகப் பிரதமர் ஆன 1981-ஆம் ஆண்டிலிருந்து குவித்த சொத்துக்களை முறையாக அறிவிக்க வேண்டுமென, அந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 2023-லிருந்து மொக்சானி – மிர்சான் இருவருக்கும் கட்டளையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் அல்லது அமைச்சரின் மகன்கள் எதற்காக இவ்வளவு சொத்துக்களைக் குவிக்க வேண்டும்? ஊழல் பற்றி வாய்க்கிழியப் பேசும் எதிர்கட்சியினர் இந்த விஷயத்தில் மௌனம் காப்பர் என அன்வார் கிண்டல் செய்தார்.
தம்மைப் பொருத்தவரை, சீர்திருத்தங்கள் என்பது வெறும் வாய் வார்த்தை அல்ல, செயலிலும் இருக்க வேண்டும் என்றார் அவர்.
இந்தோனேசியாவுக்கு 2-நாள் அலுவல் பயணம் மேற்கொண்ட அன்வார், ஜகார்த்தாவில் செய்தியாளர் ஒருவருடனான பேட்டியின் போது அவ்வாறு கூறினார்.