
கோலாலம்பூர், நவம்பர்-16 – மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் நான்காவது தேசியத் தலைவர் ‘மணிச்சுடர்’ டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் இன்று காலமானார்.
அத்துயரச் செய்தியை கனத்த இதயத்துன் தெரிவித்துக் கொள்வதாக, மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை அறிக்கை வாயிலாகக் கூறியது.
மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் கல்வி, சமூகப் பணிகளுக்கு அரும்பாடுபட்டவரான கிருஷ்ணன், தமது வாழ்க்கையை மருத்துவத் துறையிலும் சமூகப் பணியிலும் அர்ப்பணித்து வாழ்ந்தவர் ஆவார்.
மணிமன்றத்தின் உறுப்பினராக 1971 ஆம் ஆண்டு இணைந்த இவர், படிப்படியாக உயர்ந்து, 1990 முதல் 2004 ஆம் ஆண்டு வரை சுமார் 15 ஆண்டுகள் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவராகப் பதவி வகித்தார்.
இதன் வழி, மணிமன்ற வரலாற்றில் நீடித்த சேவை செய்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணனின் மறைவு, மலேசியத் தமிழ்ச் சமூகத்திற்கும் குறிப்பாக இளைஞர் மணிமன்றத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
மலேசியத் தமிழ்ச் சமூகம் என்றென்றும் அவரது சேவையை நன்றியுடன் நினைவுகூரும் என அவ்வறிக்கை மேலும் கூறிற்று.



