
கோலாலாம்பூர், செப்டம்பர்-3- சீனர் மற்றும் இந்திய வாக்காளர்களை ஈர்க்க பாஸ் கட்சி தன் இன – மத அரசியல் பேச்சுகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என, ம.சீ.ச முன்னாள் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ Tan Lian Ker ஆலோசனைக் கூறியுள்ளார்.
பொருளாதாரம், கல்வி, வாழ்க்கைச் செலவினம், வேலை வாய்ப்பு போன்ற பிரச்சனைகளை ஒரு கட்சி எவ்வாறு தீர்க்கிறது என்பதைக் கருத்தில் கொண்டே இந்தச சமூகங்கள் மதிப்பீடு செய்கின்றன.
ஆகவே, இன – மத அம்சங்களை மட்டுமே முன்னிறுத்தினால் பாஸ் கட்சியால் காலத்திற்கும் மலாய்க்காரர் அல்லாதோரை தன் பக்கம் இழுக்க முடியாது என்றார் அவர்.
சுருக்கமாகச் சொன்னால், பாஸ், ஒழுக்கத்தைக் காக்க வந்த கட்சி அல்ல, மாறாக நடைமுறை தீர்வுகள் தரும் கட்சி என்ற தோற்றத்தை அது உருவாக்க வேண்டும்.
அதோடு, பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது, கோவில்களுக்கு செல்வது, தாய்மொழிப் பள்ளிகளை ஆதரிப்பது, மற்றும் கட்சியில் முஸ்லீம் அல்லாத தலைவர்களை வலுப்படுத்துவதும் பாஸ் கட்சிக்கு முக்கியமென முன்னாள் துணையமைச்சருமான அவர் கூறினார்.
முக்கியமாக, தேர்தல் வரும்போது மட்டும் தோன்றாதீர்கள்; மேலும், பாஸ், மலாய்-முஸ்லீம்களுக்காக அல்ல, அனைத்து மலேசியர்களுக்கும் பேச வேண்டும் என்றார் அவர்.
முஸ்லீம் அல்லாத மதங்கள் கலாச்சாரங்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை பாஸ் குறைத்தால் தான், மதவாத கட்சி என்ற அதன் பிம்பம் உடைந்து, அனைவரையும் அரவனைத்துச் செல்லும் கட்சி என்ற நல்ல தோற்றம் உருவாகும்.
இல்லையெனில், சீனர் மற்றும் இந்திய வாக்காளர்கள் தொடர்ந்து பாஸ் கட்சியிடமிருந்து தள்ளியே இருப்பார்கள் என Tan Lian Ker நினைவுறுத்தினார்.