
கோலாலாம்பூர், ஜூலை-29- மார்ச் மாத இறுதி வரைக்குமான நிலவரப்படி மலேசியாவின் மொத்தக் கடன் 1.3 ட்ரில்லியன் ரிங்கிட்டுக்கு உயர்ந்துள்ளது.
பொது மேம்பாட்டு செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான தொடர்ச்சியான நிதிப் பற்றாக்குறையால், இந்த உயர்வு உந்தப்பட்டுள்ளதாக நிதித் துறை துணையமைச்சர் லிம் ஹுய் யிங் (Lim Hui Ying) தெரிவித்தார்.கடந்தாண்டு இறுதியில் கடன் சுமை RM1.25 டிரில்லியனாக இருந்தது.
இந்நிலையில், உள்கட்டமைப்பு வசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட வியூக மேம்பாட்டுச் செலவினங்களை மேற்கொண்டதால் இந்த 50 பில்லியன் ரிங்கிட் கடன் சுமை அதிகரித்துள்ளதாக, மக்களவையில் அவர் சொன்னார்.
நிதிப் பற்றாக்குறை 2022-ஆம் ஆண்டில் GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 விழுக்காட்டிலிருந்து கடந்தாண்டு 4.1 விழுக்காடாகக் குறைந்தது.
இவ்வாண்டில் 3.8 விழுக்காட்டுக்கு அது மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
கடன் சுமை உயர்ந்துகொண்டே போவதைத் தடுக்க, வருவாய் மூலங்களை விரிவுபடுத்துதல், மானிய மறுசீரமைப்பு மற்றும் அரசாங்க உத்தரவாதங்கள் மற்றும் பொது-தனியார் பங்காளித்துவங்களுக்குக் கடுமையான வழிகாட்டுதல்களை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாக லிம் சுட்டிக் காட்டினார்.
எதிர்காலக் கடன்களும், இனி அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மட்டுமே என வரையறுக்கப்படும்.
அதோடு, அரசாங்க உத்தரவாதங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 விழுக்காடு வரை மட்டுமே இருக்க முடியுமென்ற உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படும் என்றார் அவர்.