
மஸ்ஜித் தானா, மார்ச்-10 – தத்தம் மத நம்பிக்கைகளைப் பின்பற்ற இந்நாட்டு மக்களுக்கு இருக்கும் உரிமையை அனைவரும் மதிக்க வேண்டுமென, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.
பல்லின மக்களுக்கிடையில் நிலவும் நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அது அவசியமென்றார் அவர்.
மற்றவர் நம் மதத்தை மதிக்க வேண்டுமென்றால் நாமும் அவர்களின் மதங்களை மதிக்க வேண்டும் என புனித குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது.
எனவே, மத விவகாரங்களை முன்வைத்து மலேசியர்கள் தங்களின் ஒற்றுமையை சீர்குலைத்து விடக் கூடாது என, அம்னோ தலைவருமான சாஹிட் கேட்டுக் கொண்டார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப அரசாங்கம் தேசிய ஒற்றுமையை அரசாங்கம் கட்டிக் காத்து வருகிறது.
எனவே, மத விவகாரங்கள் குறிப்பாக இஸ்லாத்தைத் தற்காப்பதில் அரசாங்கம் மெத்தனமாகச் செயல்படுவதாகக் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் துணைப்பிரதமர் மறுத்தார்.
ஏரா வானொலி அறிவிப்பாளர்களின் ‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சையில் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய அரசாங்கம், இஸ்லாம் இழிவுப்படுத்தப்படும் போதெல்லாம் இந்த தீவிரத்தைக் காட்டுவதில்லை என ஒரு சிலரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கது.