
கோலாலம்பூர், செப்டம்பர் 29 – ஒரு கவிஞரின் படைப்பு காலத்தையும் வென்று நின்று சமூகத்துக்கு பயன் தருவதாக அமைய வேண்டும். அந்த சிறப்புமிகு திறனை கவிஞர் பெர்னாட்ஷா தமது இருபது ஆண்டுகாலக் கவிதைச் சேமிப்புகளை ஒருங்கிணைத்து ‘மனிதம் தேடும் மனிதன்’ எனும் நூலின் வழி நிரூபித்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசிய துணைத் தலைவரும் மற்றும் கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவருமான டத்தோ’ஸ்ரீ டாக்டர் மு.சரவணன்.
மலேசிய கண்ணதாசன் அறவாரியத்தின் ஆதரவோடு, கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் ம.இ.கா தலைமையகத்தில் அமைந்துள்ள நேதாஜி அரங்கில் தலமையுரை ஆற்றி இந்நூலை சரவணன் வெளியீடு செய்ததோடு ‘மனிதம் தேடும் மனிதன்’ நூலின் பல சிறப்புகளை எடுத்துரைத்து அதை அனைவரும் வாங்கி படிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ சகாதேவன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜேந்திரன் பெருமாள், வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமி, சிந்தனைக் கவிஞர் சீராகி, மலேசிய கண்ணதாசன் அறவாரியச் செயலாளர் கரு.கார்த்திக், இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பிரமுகர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமி, தமது வாழ்த்துரையில்
கவிதைக்கு பொய் அழகு என்றாலும், அதில் இடம் பெறும் கருத்துகள் நம் வாழ்வியலோடு ஓட்டியிருப்பதையும் பிரதிபலிக்க வேண்டும் என்றார். அவ்வகையில் கவிஞர் பெர்ணாட்ஷா வணக்கம் மலேசியாவில் பணியாற்றிய காலத்திலேயே அவரின் திறமையைத் தாம் அறிந்திருந்தாகவும் அதனை கவிதைகளில் அழகாக அவர் எடுத்தியம்பியது பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார்.
பெர்னாட்ஷாவின் கவிதைகள், 1992 ஆம் ஆண்டிலிருந்து மலேசிய நண்பன் நாளிதழ், மக்கள் ஓசை வார இதழ், பின்னர் நாளிதழ், வணக்கம் மலேசியா வார இதழ் போன்ற பத்திரிகைகளில் இடையிடையே வெளிவந்திருந்தன.
கடுமையான வேலைப்பளுவின்போதும் கவிதை படைப்பைத் தொடர்ந்து, ஊடகப் பணியையும் படைப்புலகப் பயணத்தையும் இரண்டு கண்களாக காத்து வந்தார்.
முன்னதாக, ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்த நூலை வாங்கி தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியை வணக்கம் மலேசியா செய்தி பிரிவு தலைவர் வேதகுமாரி வெங்கடேசன் நேர்த்தியாக தொகுத்து வழங்கினார்.