
புனே, ஜூலை 24 – பூனேவில் தனது சொந்த மனைவியின் குளியல் வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு, கார் மற்றும் வீட்டுக் கடனைச் செலுத்த பணம் கேட்டு மிரட்டிய அரசு அதிகாரிக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அரசு அதிகாரியான பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணும், திருமணத்திற்கு பின்பு தன்னை கொடுமைப்படுத்தி துன்புறுத்தியதாக தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட பின் கணவருக்கு மனைவியின் நடத்தை குறித்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதென்றும், தொடர்ந்து உடல் மற்றும் மன உளவியல் தாக்குதலுக்கு அவர் ஆளாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மனைவியின் குளிக்கும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி, ரூபாய் .1.5 லட்சத்தை பெற்றோரிடமிருந்து கொண்டு வருமாறு தன் கணவர் தனக்கு பலமுறை அழுத்தம் கொடுத்துள்ளார் என்று அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீசார், மிரட்டல், குடும்ப வன்முறை, பொருளாதார சுரண்டல் மற்றும் தனியுரிமை மீறல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.