ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-24 – பினாங்கு, பாயான் டெப்பாசில் ஆடம்பர குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த வீட்டொன்றிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாசப் படங்களும் வீடியோக்களும் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை, சிறார் பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்டவையாகும்.
அந்த மூன்று மாடி வீட்டில் நேற்றிரவு புக்கிட் அமான் போலீஸ் தலைமையில் ‘Op Pedo Bersepadu PDRM-MCMC’ சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் போது சிக்கிய சந்தேக நபரை விசாரித்ததில், இரண்டாவது மாடியில் இருந்த 2 கணினிகளில் ஒன்றில் 2,000-க்கும் மேற்பட்ட ஆபாச படங்களும் வீடியோக்களும் இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
ஒரு பொறியாளரான 40 வயது அவ்வாடவர், அப்போது வீட்டில் தனியாக இருந்தார்.
அவரின் மனைவியும் பிள்ளைகளும் வெளிநாட்டில் விடுமுறை கழித்து வருகின்றனர்.
போலீசார் கேட்டதற்கு, சிறார்கள் எப்போதும் ‘புதுமலர்ச்சியோடு’ இருப்பார்கள் என வாய்கூசாமல் அந்நபர் பதிலளித்துள்ளார்.
இதையடுத்து, 2017 சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக அவர் கைதானார்.
சிறார் ஆபாசப் படங்கள் தயாரிப்பு தொடர்பில் NST கடந்த வாரம் வெளியிட்ட தொடர் கட்டுரையை அடுத்து போலீஸ் இந்த அதிரடிச் சோதனையை மேற்கொண்டது.