
கங்கார், பிப்ரவரி-3 – பெர்லிஸ், கங்கார், சிம்பாங் எம்பாட்டில் பெண் குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு கைவிட்டுச் சென்ற சந்தேகத்தில், பெண்ணொருவர் கைதாகியுள்ளார்.
ஜனவரி 19-ஆம் தேதி குவாலா சங்லாங், ஜாலான் கம்போங் ராமாவில் உள்ள வீட்டொன்றின் முன்புறம் முன்னதாக அக்குழந்தைக் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் விசாரணையில் இறங்கிய போலீஸார், உணவகப் பணியாளரான 29 வயது அப்பெண்ணை, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைதுச் செய்தனர்.
அவர் தற்போது 4 சிறு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்; அவரின் கணவர் போதைப்பித்தர் மறுவாழ்வு மையத்தில் உள்ளார்.
ஜனவரி 18-ஆம் தேதி மாலை 6.30 மணி போல், ஜாலான் தோக் பூலாவில் உள்ள கழிவறையில் யாருடைய உதவியுமின்றி அந்தப் பெண் சிசுவைப் பிரசவித்துள்ளார்.
இந்நிலையில் மறுநாள் அதிகாலை தோழியின் Myvi காரிலேறிப் போய், கம்போங் ராமாவில் குழந்தையைக் கைவிட்டுச் சென்றது விசாரணையில் கண்டறியப்பட்டது.
அப்பெண் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
துண்டினால் சுற்றப்பட்டு கைலி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை, ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.