
கோலாலாம்பூர், டிசம்பர்-4 – மலாக்கா, டுரியான் துங்காலில் 3 இந்திய இளைஞர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சுயேட்சை விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எழுதிய திறந்த மடலில், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
நவம்பர் 24ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து குடும்பத்தாரும் வழக்கறிஞர்களும் எழுப்பிய சந்தேகங்களை புறக்கணிக்க முடியாது என அவர் கூறினார்.
கொல்லப்பட்ட மூவரில் ஒருவரது ஆடியோ குரல் பதிவு மற்றும் போலீஸின் ஆரம்பக் கூற்றுகளுக்கு இடையிலான முரண்பாடு, சம்பவம் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.
எனவே, வெளிப்படையான, நியாயமான, தொழில்முறையான விசாரணை அவசியம் என ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், “நியாயம் தாமதிக்கப்படக் கூடாது; உண்மை மறைக்கப்படக் கூடாது” என்பதால், சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய அதிகாரிகளும், உண்மையை மூடி மறைக்க முயலுவோரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இவ்வேளையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் போலீஸ் புகாருக்கிணங்க, விசாரணையை புக்கிட் அமான் எடுத்துக் கொண்டதற்கும் சரவணன் நன்றித் தெரிவித்தார்.
முன்னதாக, செம்பனைத் தோட்டமொன்றில் அதிகாலை 4 மணிக்கு நிகழ்ந்த சம்பவத்தின் போது தங்களைக் கைதுச் செய்ய முயன்ற ஒரு போலீஸ்காரரை வெட்டி காயப்படுத்தியதை அடுத்து மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக மலாக்கா போலீஸ் கூறியிருந்தது.



