ஆயர் குரோ, டிசம்பர்-31, மலாக்கா சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவுஃப் யூசோ (Datuk Sri Abd Rauf Yusoh) இலேசாக கண்ணயர்ந்த வீடியோ வைரலாகியுள்ளது.
அதைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றிய மஸ்ஜிட் தானா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடினின் செயல் முறையற்றது என, ஆட்சிக் குழு உறுப்பினர் ஒருவர் சாடியுள்ளார்.
மாநில முதல்வரின் பெயருக்கு வேண்டுமென்றே களங்கம் விளைவிக்கும் தீய நோக்கில் மாஸ் எர்மியாத்தி நடந்துக் கொண்டுள்ளார்;
பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு அவர் அப்படி செய்திருக்கக் கூடாதென, அறிவியல், புத்தாக்கம், தொழில்நுட்பம், தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறைகளுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஃபைரூல் நிசாம் ரொஸ்லான் ( Datuk Fairul Nizam Roslan) தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் தூங்குகிறார் என்ற ஒரு தவறான சித்தரிப்புக்கான முயற்சியே அது;
காரணம், நாங்களும் அவையிலிருந்தோம்; முதல் அமைச்சர் தூங்கவில்லை, சோர்வில் இலேசாக கண்ணயர்ந்திருப்பார், அவ்வளவு தான் என ஃபைரூல் விளக்கினார்.
முதல் அமைச்சர் ரவுஃப் அல்லும் பகலும் உழைப்பவர்; அப்படி சோர்விலிருக்கும் போது கண்ணயர்ந்ததை பெரிதுப்படுத்தி, தவறாக சித்தரிப்பது ஏற்புடையதாக இல்லையென்றார் அவர்.
வைரலான பதிவின் கீழ், முதல் அமைச்சருக்கு பல்வேறு நோய்கள் இருப்பதாகவும் வலைத்தளவாசிகள் கருத்து பதிவிட்டுள்ளனர்.
அதிலும் உண்மையில்லை; அவருக்கு எவ்வித நோயுமில்லை; முழு ஆரோக்கியமாக உள்ளார் என ஃபைரூல் சொன்னார்.
முன்னதாக, பார்வையாளர் இருக்கைகளிலிருந்து அவ்வீடியோவைப் பதிவுச் செய்ததாக நம்பப்படும் இரு பெண்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
அப்பெண்கள் பதிவுச் செய்திருந்த வீடியோவைத் தான் பெர்சாத்து கட்சியின் மாஸ் எர்மியாத்தி வைரலாக்கியிருந்தார்.