
கோலாலம்பூர், நவ 5- குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் ( Quacquarelli Symonds (QS)) உலக பல்கலைக்கழக தரவரிசையில்: ஆசியா 2026இல் மலேசியாவின் மிக உயர்ந்த தரவரிசைப் பல்கலைக்கழகமாக UM எனப்படும் மலாயா பல்கலைக்கழகம் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதோடு , இவ்வட்டாரத்தில் 15வது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு 12வது இடத்திலிருந்து சிறிது சரிவு கண்டபோதிலும் , முக்கிய அறிகுறிகளில் UM தொடர்ந்து வலுவாகச் செயல்பட்டது.
கல்வி நற்பெயருக்கு ஆசியாவில் 14வது இடத்தையும், வேலை வாய்ப்புக்கான நற்பெயருக்கு 10வது இடத்தையும், அனைத்துலக ஆராய்ச்சி வலையமைப்பிற்கு நான்காவது இடத்தையும் மலாயா பல்கலைக்கழகம் பிடித்தது.
ஆசியாவில் முதல் இடத்தை Hong Kong பல்கலைக்கழகமும், இரண்டாவது இடத்தை பீங்கிக் (Peking) பல்கலைக்கழகமும், மூன்றாவது இடத்தை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும், Nanyang தொழிற்நுட்ப பல்கலைக்கழகமும் பெற்றன.
அண்மைய QS தரவரிசையில் 49 மலேசிய பல்கலைக்கழகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அவற்றில் 30 பல்கலைக்கழகங்கள் முன்னேற்றத்தை காட்டியுள்ளன. 10 பல்கலைகக்கழகங்கள் சரிவு கண்டிருந்தாலும் ஒன்பது பல்கலைக்கழகங்கள் இந்த பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ளன.
மலாயா பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து Universiti Putra Malaysia (UPM) 22வது இடத்தையும், Universiti Kebangsaan Malaysia (UKM) 24வது இடத்தையும், Universiti Teknologi Malaysia (UTM) 25வது இடத்தையும், Universiti Sains Malaysia (USM) 34வது இடத்தையும் பிடித்துள்ளன.
நாட்டின் இந்த ஐந்து ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களும் ஆசியாவின் முதல் 50 இடங்களுக்குள் முதன்முறையாகப் பிடித்துள்ளன.
தனியார் பல்கலைக்கழகங்களில் Taylor பல்கலைக்கழகம் 27வது இடத்தைப் பிடித்தது.
அதே வேளையில் UCSI பல்கலைக்கழகம் முதல் முறையாக முதல் 30 இடங்களுக்குள் ஒரு இடத்தைப் பெற்ற நுழைந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் 75 இடங்கள் முன்னேறி 30வது இடத்திற்கு உயர்ந்தது.



