
தாப்பா, ஏப்ரல்-13,, கோயில்களின் சட்டப்பூர்வத் தன்மை குறித்து கேள்வி எழுப்பி சர்ச்சைகளைக் கிளப்ப முயலும் எந்தவொரு தரப்பையும் இந்துக்கள் கண்டு கொள்ள வேண்டாம்.
ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.
குறிப்பிட்ட சிலரே அந்த வேலையைப் பார்த்து வருகின்றனர்; அதாவது, பிறப்பால் மலாய்க்காரர்களாக இருப்பவர்களை விட என்னமோ தங்களுக்கு தான் மலாய் உணர்வு அதிகமாக இருப்பதாக அவர்கள் காட்டிக் கொள்ள முயலுகின்றனர்.
நிதர்சன உண்மையென்றால், மலாய் சமூகத்துடன் இந்துக்கள் காலங்காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
“கோயில் சர்ச்சைகளை மலாய்க்காரர்கள் எழுப்புவதில்லை; பிரச்னை செய்வது வெறும் சம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங் போன்ற ஒரு சில தனிநபர்கள் தான்; பரவாயில்லை, அவர்கள் வாய்க்கு வந்ததை பேசட்டும்; அவர்கள் மீது அரசாங்கமும், பிரதமர் துறை அலுவலகமும் உரிய நடவடிக்கை எடுக்கட்டும்” என தாப்பா நடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் சொன்னார்.
சனிக்கிழமை, பேராக், தாப்பாவில் உள்ள ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கலில், தேசிய முன்னணி வேட்பாளருடன் ஊர்வலமாக சென்ற பிறகு செய்தியாளர்களிடம் சரவணன் பேசினார்.
ஆண்டாண்டு காலம் இல்லாமல் இப்போது மட்டும் இந்துக் கோயில்கள் திடீரென இந்நாட்டில் சர்ச்சையாவது ஏன் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
எனவே, குறிப்பிட்ட தரப்புகள், பின்னாலிலிருந்து பிரச்னையைத் தூண்டி விடுவதாக ம.இ.கா சந்தேகப்படுகிறது; தூண்டி விடுபவர்கள் யாரென்பது நேரம் வரும் போது வெளிச்சத்துக்கு வருமென்றார் அவர்.
கோலாலம்பூரில் ம.இ.கா தலைமையகம் பக்கத்தில் ஒரு சிறிய கோயில், PERKIM எனப்படும் மலேசிய இஸ்லாமிய நல அமைப்புக்குச் சொந்தமான பள்ளிவாசலுக்கு எதிர்புறம் கட்டப்படுவதாக வெள்ளிக் கிழமை பிரச்னை எழுந்தது குறித்து சரவணன் கருத்துரைத்தார்.
அவர்கள் புதியக் கோயிலைக் கட்டுவதாக கூறப்படுவதை சரவணன் மறுத்தார்; புதிய நிலத்திற்கு இடமாறிச் செல்வதற்கு முன்பு தற்காலிகமாக அது அங்கு நிறுவப்பட்டுள்ளது, அவ்வளவுதான்.
இதை ஏன் ஃபிர்டாவுஸ் வோங் சர்ச்சையாக்கினார் என தெரியவில்லை; உண்மையிலேயே அவருக்கு நல்ல எண்ணம் இருந்திருந்தால் ம.இ.கா தலைவர்களைச் சந்தித்து விளக்கம் பெற்றிருக்கலாம்.
அதை விடுத்து நேரடியாக மறியலில் இறங்குவதும், சினமூட்டுவமும் தேவையற்றது என டத்தோ ஸ்ரீ சரவணனன் கூறினார்.
சர்ச்சையாகியுள்ள அந்த சிறியக் கோயில் குறித்து DBKL-லும் விளக்கமளித்துள்ளது;
வர்த்தகத் தள கட்டுமானம் முடியும் வரை தற்காலிகமாக அந்த தனியார் வழிபாட்டுத் தலம் அங்கு நிறுவப்பட்டுள்ளது; அது பொது மக்கள் பயன்பாட்டுக்கு அல்ல.
மேலும், அதன் உரிமையாளர், DBKL-லின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி அந்த தற்காலிகக் கட்டுமானத்தை இடம் மாற்றுவதாக உத்தரவாதம் அளித்துள்ளார் என்றும் DBKL தனதறிக்கையில் கூறியது.