
புத்ராஜெயா, ஏப்ரல்-24, நாட்டில் தேசியக் கொடியை உட்படுத்திய மற்றொரு தவறு நிகழ்ந்துள்ளது.
இம்முறை கல்வி அமைச்சே அத்தவற்றைச் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று வெளியிட்டப்பட்ட 2024 SPM தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வு அறிக்கையில் தான் அத்தவறு நிகழ்ந்துள்ளது.
அதனை உறுதிப்படுத்திய கல்வி அமைச்சு, அதற்காக மலேசியர்களிடம் மன்னிப்புக் கோரியது.
தேசியக் கொடி, சுதந்திர நாட்டின் இறையாண்மையைப் பிரதிபலிப்பதால், இது ஏற்றுக் கொள்ள முடியாத தவறு என்பதை அமைச்சு ஒப்புக் கொண்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விரிவான விசாரணைகளும் நடைபெற்று வருவதாக, சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சு கூறியது.
தவறான ஜாலூர் கெமிலாங் கொடி இடம் பெற்ற அனைத்து பகுப்பாய்வு அறிக்கைகளையும் திரும்ப ஒப்படைக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அவற்றை உடனடியாக திருத்தி அமைக்கும் பணிகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு விளக்கியது.
பிறையில்லாமல் தேசியக் கொடியை பிரசுரம் செய்ததற்காக, இரு சீன நாளேடுகளும், பின்னர் மலேசியாவில் கண்காட்சியியோல் பங்கேற்ற சிங்கப்பூர் நிறுவனமும் இதே சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது