
வாஷிங்டன், ஆகஸ்ட்-1- மலேசிய ஏற்றுமதி பொருட்களுக்கான வரி விகிதத்தை, அமெரிக்கா 25-ந்திலிருந்து 19 விழுக்காட்டுக்குக் குறைத்துள்ளது.
சில நாடுகளுக்கான பரஸ்பர வரி விகிதங்களில் மாற்றம் செய்து அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள ஆணையில் அவ்விவரம் இடம் பெற்றுள்ளது.
ஏப்ரலில் 24 விழுக்காடு வரி அறிவிக்கப்பட்டு, பின்னர் ஆகஸ்ட் 1 முதல் 25 விழுக்காடு அமுலுக்கு வருமென வெள்ளை மாளிகை முன்னதாக அறிவித்திருந்தது.
எனினும் மலேசியா தொடர்ந்து அமெரிக்காவுடன் பேசி வந்தது. இந்நிலையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் நேற்று அதிகாலை ட்ரம்புடன் தொலைப்பேசியில் பேசினார்.
இதையடுத்து மலேசியாவுக்கு அதிக சுமையில்லா வரி விகிதம் அறிவிக்கப்படுமென்றும் நாடாளுமன்றத்தில் அன்வார் கோடி காட்டியிருந்தார்.
அவர் சொன்னது போலவே 6 விழுக்காடு குறைக்கப்பட்டு இப்புதிய வரி விதிகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில் ட்ரம்ப்பின் இந்த வரி விகித மாற்றங்கள் 10-த்திலிருந்து 44 விழுக்காடு வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவைப் போல் தாய்லாந்து-கம்போடியா இரு நாடுகளுக்கும் 19 விழுக்காடு வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 36 விழுக்காடாக இருந்த வரி விகிதம், எல்லைப் பிரச்சனையில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்ததால், தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குப் போகாத மியான்மார் மற்றும் லாவோஸ் நாடுகளுக்கு 40 விழுக்காடு வரி நீடிக்கிறது.
வியட்நாமுக்கு 20 விழுக்காடும், இந்தோனேசியா – பிலிப்பின்ஸ் நாடுகளுக்கு 19 விழுக்காடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பொருட்களுக்கு 10 விழுக்காடு பரஸ்பர வரி நீடிக்கிறது.